கண்டலேறு அணையில் 40 டிஎம்சி நீர் இருப்பு முதல் தவணை காலத்தில் 4 டிஎம்சி தண்ணீர் முழுமையாக கிடைக்குமா?

சென்னை: கண்டலேறு அணையில் 40 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருக்கும் நிலையில், தமிழகத்துக்கான முதல் தவணை காலத்தில் 4 டிஎம்சி தண்ணீரை முழுமையாக கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், கோடை காலத்தை சமாளிக்க அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். சென்னை மக்கள் கடந்த ஆண்டு வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்தனர். பலர் தண்ணீர் கிடைக்காமல் சென்னையை காலி செய்து விட்டு வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அந்த அளவுக்கு மக்கள் தண்ணீருக்காக தவியாய் தவித்தனர். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரு குடம் தண்ணீருக்காக வரிசையில் காத்து நின்றனர். அதற்கு காரணம், நிலத்தடி நீர் அதால பாதாளத்துக்கு சென்று விட்டதால் வீட்டு உபயோகத்துக்கு கூட தண்ணீர் கிடைக்காத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபோன்ற தண்ணீர் பஞ்சத்தை சென்னை மக்கள் இனியும் காணக்கூடாது என்ற அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதற்கு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டது தான் முக்கிய காரணம்.

இந்த நான்கு ஏரிகளிலும் தண்ணீர் இல்லாவிட்டால் மாற்று வழிகள் மூலம் தண்ணீரை பெற்று குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீரை வழங்கி குடிநீர் வாரியம் சமாளிக்கும். எத்தனை மாற்று வழிகளை கையாண்டாலும் இந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாவிட்டால் மக்கள் குடங்களுடன் தெருவுக்கு வருவது சென்னையில் எழுதப்படாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் இந்த ஏரிகளில் நீர் இருப்பு இருந்தால் மட்டுமே கோடை காலத்தை சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. மழை பொய்துவிட்டாலும், தெலுங்கு- கங்கை திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் இரண்டு தவனை காலங்களில் 12 டிஎம்சி தண்ணீரை தர வேண்டும். இந்த தண்ணீர் முழுமையாக கிடைத்தாலே எப்படிப்பட்ட வறட்சியிலும் சென்னை மக்களுக்கு தண்ணீர் வழங்கலாம். ஆனால் இந்த தண்ணீரை ஆந்திரா அரசு எந்த ஆண்டும் முழுமையாக தருவதில்லை.

அவர்கள் தண்ணீர் திறந்து விட்டாலும் கிருஷ்ணா கால்வாயில் ஆந்திர விவசாயிகள் அதிக திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி விடுகின்றனர். இப்படிப்பட்ட பல்வேறு குளறுபடிகள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இருந்தாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழு கொள்ளவை எட்டவில்லை. தற்போது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளையும் சேர்த்து நேற்றைய நிலவரப்படி 6,042 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. அதாவது 6.04 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இதற்கு, இன்று வரை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பது தான் காரணம். வினாடிக்கு 390 கனஅடி என்ற அளவில் குறைந்த அளவு தண்ணீர் வந்தாலும் தொடர்ந்து வருவதால் ஓரளவு பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது முதல் தவணை காலம் தொடங்கிவிட்டது. அதாவது ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான இந்த கால கட்டத்தில் 4 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு தர வேண்டும். மழை குறைந்துவிட்டதால் தொடர்ந்து தண்ணீர் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனாலும் கண்டலேறு அணையில் தற்போது 40.55 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே, ‘தண்ணீர் இருப்பு இல்லை’ என்று ஆந்திர அரசு கைவிரிக்கும் முன்பாகவே, தற்போதைய கண்டலேறு அணையின் இருப்பை காட்டி 4டிஎம்சி தண்ணீரை முழுமையாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: