உதவி கமிஷனர் தலைமையில் ரஜினி வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

சென்னை: பெரியார் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் ரஜினிக்கு எதிராக போராட்டம் நடந்ததால், அவரது வீட்டிற்கு உதவி கமிஷனர் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசினார். அதற்கு தமிழகத்தை சேர்ந்த அமைப்புகள் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று பெரியார் விஷயத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறிவிட்டதால், இப்போது போராட்டம் தமிழகம் முழுவதும் தீயாக பரவி வருகிறது.

இதையடுத்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் ரஜினி வீட்டை நேற்று முற்றுகையிட முயன்றனர். அதேபோல், ரஜினி மீது பழனி டவுன் காவல் நிலையம் என பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி உள்ளதால், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி உதவி கமிஷனர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் போயஸ் கார்டன் பகுதியில் போலீசார் தடுப்புகள் அமைத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: