சுகாதார தொழிலாளிகளாக மாறிய பள்ளி மாணவர்கள்: கூடலூர் அருகே அவலம்

கூடலூர்: கூடலூர் அருகே குள்ளப்பகவுண்டன்பட்டி கள்ளர் பள்ளியில், துப்புரவு பணிக்கு ஆளில்லாததால், குப்பைக்கழிவுகளை மாணவர்களே தள்ளுவண்டியில் கொண்டு சென்று குப்பை தொட்டிகளில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது. கூடலுர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில், அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் சேகரமாகும் உணவுக்கழிவுகள், குப்பைக்கழிவுகளை அகற்ற இங்கு துப்புரவு பணியாளர்கள் இல்லை.

இதனால் மதிய உணவு இடைவேளையின் போது இந்த குப்பைக் கழிவுகளை பள்ளி மாணவர்களே டிரம்களில் நிறைத்து தள்ளுவண்டியில் எடுத்துச் சென்று ரோட்டில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர். கொளுத்தும் வெயிலில் மாணவர்கள் குப்பை கொண்டு செல்வதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், துப்புரவு பணிக்கு ஆளில்லாததால் மாணவர்களே தொடர்ந்து இப்பணிகளைச் செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், தலைமை ஆசிரியர் கூறினாலே ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் இந்தப்பணி செய்வார்கள், அதைவிடுத்து சிறுவர்கள் என்றும் பார்க்காமல் மாணவர்களை கொளுத்தும் வெயிலில் வேலை வாங்குவது தவறு என்றனர்.

இதுகுறித்து, ஊராட்சித்தலைவர் பொன்னுத்தாய் குணசேகரனிடம் கேட்டபோது, இப்போதுதான் பொறுப்பேற்றுள்ளோம். கூட்டம் போடவில்லை. முதல் கூட்டத்திலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கென குப்பைகள் மற்றும் கழிவுகள் அகற்ற தனியாக ஒரு பணியாளர் நியமிக்க ஏற்பாடு செய்யப்படும். இனிமேல் இதுபோல் நடக்காது’’ என்றார்.

Related Stories: