பொதுப்பணித்துறையில் பணிவரன்முறை செய்யப்பட்ட 3,047 தினக்கூலி ஊழியர்களுக்கு 21 நாட்களாகியும் ஊதியம் வரவில்லை: ஊழியர்கள் தவிப்பு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் அதாவது மாதம் 7 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதனால், தினக்கூலி ஊழியர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இது தொடர்பாக தினக்கூலி ஊழியர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா செல்வன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் பேரில், பொதுப்பணித்துறையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அதே பணியை செய்யும் நிரந்தர ஊழியர்களை போல் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவர்களது ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.

தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கான ஊதிய வரைமுறை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, பொதுப்பணித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் தொடர்பான பட்டியலை ஸ்கிரீனிங் கமிட்டி ஆய்வு செய்து அரசுக்கு அனுப்பி வைத்தது. அதன்படி, கடந்த மாதம் 3407 தினக்கூலி ஊழியர்களை புதிய ஊதியம் வரன்முறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்ற ஊழியர்கள் உடனடியாக அந்தெந்த கோட்டங்களில் நியமன ஆணையை பெற்றுக்கொண்டு பணியில் சேர்ந்தனர். இதை தொடர்ந்து பொதுப்பணித்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் வங்கி கணக்கில் புதிய ஊதியம் வழங்கப்படும் என்றும், இந்த ஊதியம் குறைந்த பட்சம் 18,500 ஊதியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அந்த ஊழியர்களுக்கு 21 நாட்களாகியும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு ஊழியர்கள் விவரங்களை அந்தெந்த கோட்டங்கள் சார்பில் கருவூலத்துறைக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், பொங்கல் பண்டிகையை ஓட்டி இந்த ஊழியர்களுக்கு போனஸ் கூட இல்லாத நிலையில் கடன் வாங்கி பண்டிகையை கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தினக்கூலி ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: