சித்தா பார்மசிஸ்ட் முழுவதும் நிரப்பப்பட்ட நிலையில் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருந்தாளுநர் மட்டும் நிரப்பாமல் இருப்பது ஏன்?': மார்ச் மாதத்துடன் அறிவிப்பு ரத்து: சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்கள் அதிர்ச்சி

சென்னை: சித்தா பார்மசிஸ்ட் மட்டும் நிரப்பிய நிலையில் ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி பார்மசிஸ்ட் காலிப்பணியிடங்கள் முழுவதும் நிரப்பாமல் இருப்பது ஏன் என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அறிவிப்பு வெளியாகி மார்ச் மாதத்துடன் ஓராண்டு முடிவதால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வேலைக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரகம் அமைந்துள்ளது. இந்த ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற மருத்துவமனைகளில் 1000க்கும் மேற்ப்பட்ட சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் தினமும் 70 முதல் 100க்கும் மேற்ப்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கை, கால் வலிக்கு தேவையான தைலம், டெங்கு காய்ச்சலுக்கு தேவையான நிலவேம்பு கசாயம் போன்றவை இந்த மருத்துவமனையில் வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் ஒரு டாக்டர், பார்மசிஸ்ட் என இரண்டு பேர் பணியமர்த்தப்படுவார்கள். 1000க்கும் மேற்ப்பட்ட மருத்துவமனையில் 500க்கும் மேற்ப்பட்ட பார்மசிஸ்ட் காலிபணியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்த நிலையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 229 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை மூலம் பத்திரிக்கைகளில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சித்தா பிரிவுக்கு 148, ஆயுர்வேதா பார்மசிஸ்ட் 38, யுனானி பார்மசிஸ்ட் 20, ஓமியோபதி பார்மசிஸ்ட் 23 என 229 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதன்படி 600க்கும் மேற்ப்பட்டவர்கள் ரூ.2000 வரை செலவு செய்து மருத்துவபணியாளர் தேர்வு வாரியம் வெப்சைட்டில் விண்ணப்பித்து ஒரு வருடமாக காத்திருந்தனர். அதன்பிறகு 2019ம் ஆண்டு மார்ச் மாதம் வரை காத்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவபணியாளர் தேர்வு வாரியம் வெயிட்டேஜ் முறையில் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு அதில் தகுதியானவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்த்தனர். அப்போது தகுதியானவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தாமல் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ துறையில் தகுதியிருப்பின் ஒவ்வொருவருக்கும் 1,2,3 வரை வேலைக்கான ஆர்டர்களை கொடுத்து அனுப்பினர். இதையடுத்து தகுதியானவர்கள் தங்களுக்கு எந்த துறை பிடித்திருக்கிறதோ அதில் சேர்ந்த பிறகு இந்திய மருத்துவதுறைக்கு பட்டியல் அனுப்பி பின் எம்ஆர்பிக்கு பட்டியல் அனுப்பி அதன் பிறகு மறுபடியும் தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும். இதனால் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டிய வேலை கடந்த 1 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது.

ஆனால் சித்தா பிரிவில் மட்டும் உள்ள 148 பார்மசிஸ்ட் காலிபணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட்டு 5 மாதங்கள் சம்பளம் வாங்கிவிட்டனர். ஆனால் ஆயுர்வேதா 28, யுனானி 3, ஓமியோபதி 12 பேர் நிரப்பப்பட்ட நிலையில் மீதமுள்ள 38 காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் கடந்த ஓராண்டாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே போட்டுள்ளனர். இது குறித்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருப்பவர்கள் கூறுகையில்: இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்று கேட்டால் எங்களுக்கு எதுவும் தெரியாது நாங்கள் எங்கள் பணியை முடித்து தேனாம்பேட்டையில் உள்ள எம்ஆர்பிக்கு அனுப்பி விட்டோம். எதுவானாலும் அங்கே போய் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். இதையடுத்து எம்ஆர்பிக்கு சென்று கேட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை சந்திக்க விடாமல் அலுவலக உதவியாளர் உங்களுடைய பணி நடந்து கொண்டு இருக்கிறது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் அல்லது இணை ஆணையரிடம் கடிதம் வந்தால் உடனடியாக நிரப்பப்படும் என்று கூறி அலைக்கழிக்கின்றனர்.

229 காலிப்பணியிடங்களுக்கான பட்டியல் வெளியிட்டு மார்ச் மாதத்துடன் ஓராண்டு முடிவடைவதால் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு காத்திருப்பவர்கள் தங்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடும் என்று அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீதமுள்ள 38 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories: