பொதுத்துறை நிறுவனத்தில் நிதி தட்டுப்பாடு எதிரொலி திட்ட பணிகளுக்கு டெண்டர் விட தமிழக பொதுபணித்துறை தயக்கம் காட்டுகிறது: நிதி ஆதாரத்தை திரட்ட முடியாமல் அதிகாரிகள் திணறல்

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களின் நிதி நெருக்கடி காரணமாக அவர்களின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு டெண்டர் விட தமிழக பொதுப்பணித்துறை தயக்கம் காட்டி வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுதல் மற்றும் பராமரித்தல், அணைகள், ஏரிகள் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் திட்டப் பணிகள் நடக்கிறது. அதே போன்று தமிழக பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு செலவிட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு கனிமவள நிறுவனம், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், தமிழ்நாடு சிறு தொழில் கழகம், தமிழ்நாடு சர்க்கரை கழகம். தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், கழகங்கள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த, நிதியை நம்பி பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து அந்த பகுதிகளில் ஏரி புனரமைப்பு, தடுப்பணை அமைப்பது, பள்ளி கட்டிடம், சமூக நலக்கூடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்படுகிறது. ஆனால், பொதுப்பணித்துறை சார்பில், பணிகளை தொடங்கிய பிறகு, அந்த நிறுவனங்களில் இருந்து நிதி வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திட்ட பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு பணம் செட்டில் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக பணம் கிடைக்க காலதாமதம் ஆவதால், ஒப்பந்த நிறுவனமும் பில் தொகைக்காக காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் நிதி கிடைக்காமல் கூட போய் விடுகிறது. இதனால், பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை கொண்டு திட்டப்பணிகளை செய்யவே பொதுப்பணித்துறை தயக்கம் காட்டி வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுத்துறை நிறுவனங்கள் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக சட்டசபையில் அறிவிக்கிறது. இதற்காக, நிதியும் அதில் இடம் பெற்றிருக்கும். அதை நம்பி டெண்டர் விட்டு பணிகளை செய்தால், அந்த நிதிக்கான கணக்கு மட்டும் அறிக்கையில் இருக்குமே தவிர நிதி இருக்காது. அந்த நிதியை தேடி அலைய வேண்டி இருக்கும். இதனால், அதை நம்பி பணிகளை தொடங்கினால் அதற்காக நிதியை பெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, தான் அந்த நிதியை நம்பி திட்டப்பணிகளை செய்யவே தயக்கம் வருகிறது’ என்றார்.

Related Stories: