குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவது சட்டத்துக்கு புறம்பானது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

சென்னை: குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று மாநில அரசுகள் கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெறுகிறது. கேரளா மற்று பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து மாநில சட்டமன்ற தீர்மானத்தில் நிறைவேற்றியுள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை சிட்டிசன்ஸ் அமைப்பு மற்றும் நியூ இந்தியா அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தம்  தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. அதில் பங்கேற்ற மத்திய  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தராமன் பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 370 ன் படி பாகிஸ்தானில் இருந்து வந்து முகாமில் தங்கியிருந்தவர்கள் லோக்சபா தேர்தலில் மட்டும் வாக்களிக்க முடியும். தற்போது இந்த சட்டம் நீக்கப்பட்டதால் சட்டசபை தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் என்பது, குடியுரிமை வழங்குவதற்கு மட்டுமே தவிர, குடியுரிமையை பிடுங்குவதற்காக அல்ல.

கடந்த ஆறு ஆண்டுகளில், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட  பாகிஸ்தானை சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 914 பேர், வங்காள தேசத்தைச் சேர்ந்த 172 பேர் ஆகியோருக்‌கு இந்திய குடியுரிமை வழங்கப்படுள்ளது. கடந்த 1964 முதல் 2008ம் ஆண்டு வரை 4.61 லட்சத்திற்கும் மேற்பட்ட, இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து வழங்கப்படும். குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என, மாநில அரசுகள் கூறுவது, சட்டத்துக்கு புறம்பானது. லோக்சபாவில் நிறைவேற்றப்படும் சட்டத்தை, அமல்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் கடமை. ஒவ்வோரு திருத்த சட்டத்தில் ஒவ்வோரு பிரிவினருக்கு குடியுரிமை வழங்கப்படும். இதற்கு இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என அர்த்தமில்லை. முகாமில் உள்ள 90 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: