குன்றத்தூர், மாங்காடு பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் தொடரும் விபத்துகள்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பல்லாவரம்: குன்றத்தூர், மாங்காடு, கோவூர் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் விபத்தில் சிக்கி, கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகள் தற்போது பல்வேறு துறைகளில் அபார வளர்ச்சியடைந்து வருகின்றன. இதனால் இந்த பகுதிகளை சுற்றிலும் பல உயர் ரக அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை நகரின் மையப் பகுதிகளுக்கு எந்நேரமும் சென்று வரும் வகையில் இந்த புறநகர் பகுதிகள் அமைந்துள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் மக்கள் இந்த புறநகர் பகுதிகளில் குடியேற அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து அதிகரிப்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளை அகலப்படுத்தும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.

இவ்வாறு இருக்க, இந்த புறநகர் சாலைகளான குன்றத்தூர் - போரூர் பிரதான சாலை மற்றும் மாங்காடு வழியாக செல்லும் குன்றத்தூர் - குமணன் சாவடி சாலை ஆகிய பிரதான சாலைகளில் இரவு, பகல் என எந்நேரமும் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால் இந்த சாலையில் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மாடுகள் மீது மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால், தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பெண்களே, மாடுகளால் தாக்கப்பட்டு விபத்தில் சிக்குகின்றனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன போக்குவரத்து நெரிசலும் அதிக அளவில் ஏற்படுகிறது.

இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட உயிர் காக்கும் வாகனங்களும், செல்ல வேண்டிய இடங்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது மாடுகளை கட்டிப் போட்டு வளர்க்காமல், இப்படி சாலையில் சகட்டு மேனிக்கு அவிழ்த்து விடுவதால், நாள்தோறும் விபத்துக்கள் ஏற்படக் காரணமாக அமைகிறது. சமீபத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது போல், சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால், அதன் உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று புறநகர் பகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சார்பிலும் அறிவிக்க வேண்டும்.

அப்பொழுது தான், இதுபோன்று மாடுகள் சாலையில் சுற்றித் திரிந்து விபத்து ஏற்படுவது தடைபடும். அதையும் மீறி அலட்சியமாக செயல்படும் மாடுகளின் உரிமையாளர்களின் மாடுகளை அரசு பறிமுதல் செய்து, சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் பெருகி வரும் விபத்துக்கள் குறைந்து, வாகன ஓட்டிகள் விபத்தில்லா பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: