சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 1,511 மில்லியன் கன அடி நீர் இருப்பு

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில், கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் வரத்து காரணமாக தற்போது 1,511 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனால் நடப்பு ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என கருதப்படுகிறது. சென்னை மாநகர மக்களின் தாகத்தை தீர்க்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை போதுமான அளவில் பெய்யாததால் நீர் வரத்து இன்றி ஏரி முற்றிலும் வறண்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது பெய்தது. ஆனாலும் குறிப்பிட்ட சதவீதம் பெய்யாததால் நீர்வரத்து குறைந்த அளவே வந்தது. குட்டைபோல தண்ணீர் தேங்கி இருந்தது.

இந்நிலையில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்கீழ், ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.  நேற்று காலை வினாடிக்கு 279 கன அடி நீர் கிருஷ்ணா கால்வாய் வழியாக வந்துகொண்டு இருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதில், 28.96 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. இதில், 1,220 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரியில் இருந்து சென்னை மக்களின் குடிநீருக்கென புழல் நீரேற்று நிலையத்துக்கு வினாடிக்கு 389 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Related Stories: