புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குளம் 6 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தெப்ப திருவிழா நடைபெறவில்லை: பக்தர்கள் அதிருப்தி

சென்னை: புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குளம் கடந்த 6 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் தெப்பத்திருவிழா நடத்தப்படவில்லை. இது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புரசைவாக்கத்தில் கங்காதீஸ்வரர் கோயில், அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாட்களுக்கு தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். இந்த கோயில் குளத்திற்கு தண்ணீர் வரும் வகையில் வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மழைகாலங்களில் தண்ணீர் நிரம்பி வந்தது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கால்வாயுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயை இணைத்தாக தெரிகிறது.

இதனால், குளத்துக்கு கழிவுநீர் வரும் நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, குளத்துக்கு செல்லும் கால்வாய் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மழைக்காலங்களில் நீர் வரத்து பாதிக்கப்பட்டு தெப்பக்குளம் வறண்டு காணப்படுகிறது. இதனால், கடந்த 2013க்கு பிறகு இந்த கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெறவில்லை. தற்போது, தெப்பக்குளம் புதர் மண்டி காணப்படுகிறது. இதை தூர்வாரி, தண்ணீர் சேமிக்க வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தைப்பூச திருவிழா அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பு இந்த தெப்பக்குளத்தை தூர்வரி, தண்ணீர் நிரப்பினால் மட்டுமே தெப்பத்திருவிழாவை நடத்த முடியும். இல்லையெனில் இந்தாண்டும் தெப்பத்திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, இந்த குளத்தை தூர்வாரி தெப்பத்திருவிழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கூறுகையில் ‘கடந்த 6 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டாவது குளத்தை தூர்வாரி, தண்ணீர் நிரப்பி தெப்பத்திருவிழா நடத்த அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: