சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் திடீர் திடீரென உடைந்து விழும் அலங்கார கண்ணாடிகள்: பயணிகள் பீதி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அலங்கார கண்ணாடிகள் திடீர் திடீரென உடைந்து விழுநதால், பயணிகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னையில் முதல் வழித்தட திட்டத்தில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்களில் பயணிகளை கவரும் வகையில் அலங்கார கண்ணாடிகள், வண்ண ஓவியங்கள் உள்ளிட்டவைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அலங்கார கண்ணாடிகள் மற்றும் டைல்ஸ் கற்கள் உடைந்து விழுந்தவாறு உள்ளன. மழை காலங்களில் மெட்ரோ ரயில் நிலையங்களில் நீர் கசிவு ஏற்பட்டு வந்தது.

கடந்த மாதம் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கட் கவுன்டர் அருகே இருந்த அலங்கார கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, கடந்த 13ம் தேதி அண்ணாநகர் கிழக்கு நிலையத்தில் இருந்த அலங்கார கண்ணாடி திடீரென உடைந்து கீழே விழுந்தது. இதேபோல், அண்ணாநகர் டவர் நிலையத்தில் சுவரில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது. இதில் பயணிகள் யாரும் அருகில் இல்லாததால் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்தநிலையில், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து லிப்ட் மூலமாக வெளியே வரும் பாதைக்கு அருகில் உள்ள கண்ணாடிகளில் நேற்று திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால், பதற்றம் அடைந்த பயணிகள் இதுகுறித்து அருகில் இருந்த ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். கண்ணாடி சேதம் அடைந்தது குறித்து ஊழியர்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளனர். நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்துசெல்லும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இதுபோன்று அலங்கார கண்ணாடிகளில் ஏற்படும் விரிசல் பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மாதம் தோறும் டைல்ஸ் கற்களிலும், அலங்கார கண்ணாடிகளிலும் ஏற்படும் இதுபோன்ற பிரச்னையை சரிசெய்து பயணிகளின் பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், சுரங்கப்பாதையில் ஏற்படும் அதிர்வு காரணமாக கண்ணாடி சேதம் அடைந்ததா அல்லது கண்ணாடியின் தரத்தில் கோளாறு உள்ளதா என்பதை பரிசோதிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கனவே, நேரு பூங்கா, ஷெனாய் நகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அலங்கார கண்ணாடிகள் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அண்ணாநகர் கிழக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்  இரவு பயணிகள் டிக்கெட் எடுக்கும் இடத்திற்கு அருகில் இருந்த அலங்கார கண்ணாடி ஒன்று திடீரென உடைந்து பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. இதை எதிர்பாராத பயணிகள் அலறியடித்து ஓடினர். இதையடுத்து ஊழியர்கள் உடைந்த  கண்ணாடி துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

இதை தொடர்ந்து, நேற்று அண்ணாநகர் டவர் நிலையத்தின் நடைமேடை 2ல் சுவரில் ஒட்டப்பட்டிருந்த பெரிய அளவிலான டைல்ஸ் உடைந்து கீழே விழுந்தது. இச்சம்பவம் குறித்து ஊழியர்கள் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அப்பகுதிக்கு பயணிகள் யாரும் செல்லாத வகையில் எச்சரிக்கை பலகைகளை வைத்தனர். அடுத்தடுத்த நடைபெற்ற இச்சம்பவம் ஊழியர்கள் மற்றும் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: