பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வேலை வாய்ப்பு முகாம்: உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்

சென்னை:  பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எருக்கஞ்சேரி எத்திராஜ் சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று காலை நடந்தது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். முகாமில், ஐடிஐ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆட்களை தேர்வு செய்வதற்காக 133 கம்பெனிகளில் இருந்து அதன் அதிகாரிகள் வந்திருந்தனர். ஒவ்வொரு கம்பெனிக்கும் தனித்தனியாக அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவ-மாணவிகள் விரும்பிய கம்பெனிகளை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இளைஞர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் உடனே வர சம்மதம் தெரிவித்து இங்கு வந்துள்ளேன். வேலை வாய்ப்பு முகாமை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இதுபோன்று திமுக சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.

அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்துள்ளதால் அப்பணியை நாங்கள் செய்து வருகிறோம்” என்றார். நிகழ்ச்சியை பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் ஏற்பாடு செய்திருந்தார்.  நிகழ்ச்சியில், திமுக இளைஞரணி துணை செயலாளர் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம். எக்ஸ்னோரா நிறுவனர் நிர்மல், பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: