கரூர் அருகே சுங்கச்சாவடியில் ‘பாஸ்டேக்’கை கேட்டு மாஜி பெண் எம்எல்ஏவிடம் துப்பாக்கி காட்டி மிரட்டல்

ஈரோடு:  முன்னாள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. பாலபாரதி. இவர் நேற்று திருச்சியில் இருந்து தனது காரில் ஈரோட்டில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மணவாசி சுங்கசாவடியில் அவரது கார் நின்றது. அவரிடம் சுங்க சாவடி ஊழியர்கள் ‘பாஸ்டேக்’கை கேட்டு உள்ளனர். இதையடுத்து பாலபாரதி பணம் கட்டி செல்லும் கியூவில் காரை நிறுத்தி உள்ளார். எனினும், ஊழியர்கள் விடாமல் ‘பாஸ்டேக்’தான் வேண்டும் என்று கெடுபிடி செய்து உள்ளனர். மேலும் அங்கு இருந்த பாதுகாவலர் கைத்துப்பாக்கியுடன் பாலபாரதியிடம் பேசி உள்ளார்.இதையடுத்து பாலபாரதி கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர்கள் சுங்க சாவடி மேனேஜரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் விரைந்து வந்து பாலபாரதியை அனுப்பி வைத்துள்ளார்.

இதன்பின், ஈரோடு சென்றடைந்தார். அங்கு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மணவாசி சுங்கச்சாவடியில் எனது கார் வந்தபோது என் அனுமதி சீட்டை காட்டினேன். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் என்னை அனுமதிக்க மறுத்து, டிரைவரிடம் தரக்குறைவாக பேசினர். இதைத்தொடர்ந்து, டிரைவர் காரை எடுக்கமுடியாது என கூறினார். அப்போது, அலுவலகத்தில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் வந்த ஒருவர் என் கார் முன் நின்றார். பின்னர், மிரட்டும் தொணியில், ‘கன்மேன்’ என கூறினார். அவர் பணத்தை எடுத்து செல்லும்போது மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், சுங்க வரி வசூலிக்கும் இடத்திற்கே வருகிறார். இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளனரா? என்பது தெரியவில்லை.  தமிழக அரசு சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: