வருவாய் கையாடல் கோயில் ஊழியர்களை பணியிடம் மாற்ற முடிவு

* கணக்கெடுக்கும் பணி தீவிரம்

* கமிஷனர் உத்தரவால் பரபரப்பு

சென்னை: கோயில் வருவாயை கையாடல் செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஒரே கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய கமிஷனர் முடிவு செய்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்  கோயில்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், தலைமை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், செயல் அலுவலர்களை தவிர்த்து கோயில்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதில்லை. இதனால், அந்த ஊழியர்கள் ஒரே கோயில்களில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த பணியாளர்கள் பெரும்பாலும் அதே கோயில்களில் ஓய்வு பெறுவதும் வழக்கமான நடைமுறையாக தான் இருந்து வருகிறது. இவர்களால் சில நேரங்களில் கோயில்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த தலைமை எழுத்தர் ஒருவர் 30 லட்சம் வரை கோயில் வருவாயை முறைகேடாக கையாடல் செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆதாரத்துடன் கோயில் செயல் அலுவலர் கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு அறிக்கையாக அனுப்பி வைத்தார். அதன்பேரில் அந்த தலைமை எழுத்தர் மீது துறை ரீதியாக நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரே கோயிலில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பணியிட மாற்றம் செய்ய கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், பல ஆண்டுகளாக ஒரே கோயிலில் பணிபுரிந்து வரும் ஊழியர்களை கணக்கெடுக்கும் பணியில் மண்டல இணை ஆணையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அந்த பட்டியல் கமிஷனரிடம் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த பட்டியலுக்கு கமிஷனர் ஒப்புதல் அளித்தவுடன் அவர்களை பணியிட மாற்றம் செய்யப்படுவர். இது, அறநிலையத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: