அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாட்டேன்; காரையும் விற்கமாட்டேன்; 16 காளைகளை அடக்கிய ரஞ்சித்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி காரை பெற்றவர் ரஞ்சித். இவர் கூறுகையில் வெற்றி பெற்ற காரை விற்க மாட்டேன் என்றும், அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கவும் மாட்டேன் என்று அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு ஜன. 15ல் மதுரை அவனியாபுரத்திலும், இரண்டாவதாக மாட்டுப்பொங்கல் தினத்தில் மதுரை பாலமேட்டிலும் அடுத்தடுத்து நடந்தன. இதனைத்தொடர்ந்து, காணும் பொங்கல் தினமான நேற்று, உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடந்தது. அலங்காநல்லூர் முனியாண்டி கோயில், காளியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில்களில் வெற்றி பெறும் வீரர்கள், காளைகளுக்கான பரிசு பொருட்களை வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பிறகு மேளதாளம் முழங்க கோயில் காளைகள் ஊர்வலமாக வாடிவாசல் பகுதிக்கு அழைத்து வரப்பட்டன. சரியாக காலை 7.40 மணிக்கு அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி கோயில் திடலில் ஜல்லிக்கட்டு தொடங்கியது.  7.45 மணிக்கு தொடங்கி மாலை 5.10 மணி வரை நடந்த ஜல்லிக்கட்டு விழாவில், 739 காளைகள் அவிழ்க்கப்பட்டன. போட்டி நடந்த 9 சுற்றுகளில் 688 பேர் பங்கேற்றனர். 16 காளைகளை அடக்கி: சிறந்த மாடுபிடி வீரராக அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித் தேர்வானார். இவர் 16 காளைகளை அடக்கி முதல் பரிசாக ரூ.6 லட்சம் மதிப்புள்ள காரை வென்றார்.

கடைசி 9வது சுற்றில் களமிறங்கிய ரஞ்சித், ஒரு மணிநேரத்தில் 16 காளைகளை அடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ‘ரஞ்சித்’ என்ற இவரது பெயரிலேயே, இவரது தம்பி சுரேஷ், 21 காளைகளை அடக்கி பரிசு வென்று, அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக பாராட்டும் பெற்றார். கார் தவிர வீரர் ரஞ்சித் 10 தங்கக்காசுகள், வெள்ளி, டி.வி. உள்ளிட்ட பல பரிசுகளும் வென்றுள்ளார். அழகர்கோவில் அருகே உள்ள ராவுத்தர்பட்டியைச் சேர்ந்த கார்த்தி 14 காளைகளை அடக்கி 2வது பரிசாக டூவீலர் வென்றார். 3வது பரிசை மதுரை அரிட்டாபட்டி கணேசன் வென்றார். இவருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

Related Stories: