சுற்றுலா மேம்பாட்டு பணிக்காக மத்தியஅரசு நிதி வழங்க தயாராக உள்ளது: சுற்றுலாத்துறை அமைச்சர் பேட்டி

சென்னை: மாமல்லபுரத்தில், சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது என்று மாமல்லபுரம் வந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்  பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார். புகழ்பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் நேற்று முன்தினம் வந்தார். அவர் புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை கல் பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றி பார்த்தார். அப்போது, சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த புகழ்பெற்ற மாமல்லபுரத்திற்கு கடந்த ஆண்டு அக்டோர் 11ம் தேதி வந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசினர். இந்த இரு நாட்டு தலைவர்கள் வந்து சென்ற பிறகு இந்த நகரத்திற்கு சர்வதேச அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த சுற்றுலா தலத்திற்கு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கு மத்திய அரசு நிதி வழங்க தயாராக உள்ளது’ என்றார். மேலும், இரு நாட்டு தலைவர்கள் வருகைக்கு முன் சிறப்பாக பல்வேறு விதமான ஏற்பாடு பணிகளை செய்த தமிழக சுற்றுலா துறை மற்றும் தொல்லியல் துறை அலுவலர்களை பாராட்டினார்.

அப்போது, கைவினை கலைஞர்கள் உருவாக்கிய மாமல்லபுரம் கடற்கரை கோயில் வண்ண ஓவியத்தை நினைவு பரிசாக மத்திய அமைச்சருக்கு சுற்றுலாத்துறை ஆணையர் அமுதவல்லி வழங்கினார். அப்போது, செங்கல்பட்டு ஆர்டிஓ செல்வம், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், தொல்லியல் துறை பாதுகாப்பு அலுவலர் சரவணன், சுற்றுலாத் துறை வளர்ச்சிக் கழக மேலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: