திருச்செங்கோட்டில் நூதனம் பெண்கள் மட்டும் பங்கேற்ற சேவல் ஜல்லிக்கட்டு

திருச்செங்கோடு: பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்செங்கோட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு, சேவல் ஜல்லிக்கட்டு எனப்படும் நூதன விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. பொங்கல் பண்டிகையையொட்டி, கிராமப்புறங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, எருதாட்டம் மற்றும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் சேவல் ஜல்லிக்கட்டு எனப்படும் நூதன விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது.

இதற்கென நந்தவனம் தெருவில், பெரிய அளவிலான வட்டத்தை வரைந்து, அதன் நடுவே போட்டியாளர்கள் நிறுத்தப்படுவார்கள். அந்த வட்டத்திற்குள் ஒரு சேவலை நிறுத்தி, அதன் காலில் ஒரு கயிறு கட்டப்படும். அந்த கயிற்றின் மறுமுனை போட்டியாளரின் காலில் கட்டப்படும். போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் வட்டத்தை விட்டு வெளியேறாமல், சேவலை பிடிக்க வேண்டும். கயிற்றை கையில் பிடித்தோ, கால் விரலால் பிடித்தோ இழுக்கக்கூடாது என்பது நிபந்தனை. இந்த போட்டியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலர், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories: