வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்துக்கு மேலாக, மாநிலம் முழுவதும் மழை நின்று, வறண்ட வானிலை நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் வளிமண்டல சுழற்சி காரமணாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 21 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 1ம் தேதி முதல் இன்று(17.01.2020) வரையிலான காலகட்டத்தில் சென்னையில் 34.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெய்ய வேண்டிய இயல்பான மழையின் அளவு 16.8 மி.மீ. ஆகும். அதன்படி, தற்போதைய மழையின் அளவு வழக்கத்தை 103% அதிகமாகும். ஆனால், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் இயல்பான மழை அளவை விட குறைவான மழையே பதிவாகியுள்ளது. அதிலும், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் இந்த காலகட்டத்தில் மழை பதிவாகவே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: