தமிழக உள்ளாட்சி தேர்தலில் பல அக்கிரமங்களை தாண்டி நாம் வெற்றி பெற்றோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் பல அக்கிரமங்கள் நடந்தாலும், அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லக்கோட்டை ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் கோபால், கருணாநிதி, மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் அடுப்பை ஏற்றி வைத்து, சமத்துவ பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். இதையொட்டி வழி நெடுகிலும் வாழை, மா, இலை, கரும்பு மற்றும் பழ வகைகளை தோரணமாக அமைத்திருந்தனர்.  இதில் பரதநாட்டியம், தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், சிலம்பாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி. இதை, நமது இல்லத்தில் நடக்கும் விழாவாக பார்க்கிறேன். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் பட்சத்தில் நாம் வெற்றி பெறுவது உறுதி.

21 சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெற்றிருந்த தொகுதிகளை திமுக கைப்பற்றியது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் 9 மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் பல அக்கிரமங்கள் நடந்தாலும், அதையும் தாண்டி நாம் வெற்றி பெற்றோம். நாம் நீதிமன்றத்தை நாடியதால் வெற்றியை பெற்றோம். இருப்பினும் தமிழகத்தில் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்போம்’ என்றார். விழாவில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, காஞ்சிபுரம் எம்பி செல்வம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: