தாவரவியல் பூங்காவில் ஓராண்டுக்கு பின் சிறுவர் ரயில் சேவை மீண்டும் துவக்கம்: மக்கள் கூட்டம் அலைமோதல்

புதுச்சேரி: புதுவையில் ஓராண்டுகளாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்த தாவரவியல் பூங்கா சிறுவர் ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை காலம் என்பதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.  புதுச்சேரி, பழைய பஸ் நிலையம் எதிரே தாவரவியல் பூங்கா உள்ளது. அரிய வகை மரங்கள் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சிறுவர், சிறுமிகளை, பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில் சிறிய ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ.10 லட்சம் வரை வருமானம் கிடைத்தன.  இதனிடையே போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் ஒருவருடத்திற்கும் மேலாக சிறுவர் ரயில் இயக்கம் அந்த பூங்காவில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சிறுவர் ரயில் தண்டவாள கட்டைகளை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை தென்னக ரயில்வே அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

 புத்தாண்டு விடுமுறை கொண்டாட்டத்திற்காக சிறுவர் ரயில் திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் அவை செயல்பாட்டிற்கு வராத நிலையில் காணும் பொங்கலுக்கு முன்பாக அதை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கவர்னர், முதல்வரின் உத்தரவுக்கிணங்க சிறுவர் ரயிலை தைப்பொங்கலுக்குள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.  இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் ரயில் நேற்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த சேவையை கவர்னர் கிரண்பேடி பங்கேற்று தொடங்கி வைத்தார். இதில் வேளாண் இயக்குனர் பாலகாந்தி, தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் வேதாச்சலம், இணை வேளாண் இயக்குனர் ராகவன் மற்றும் தாவரவியல் பூங்கா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

 பொங்கல் விடுமுறை தினம் என்பதால் முதல்நாளிலே அங்கு வந்த சிறுவர், சிறுமியர் தங்களது பெற்றோர், உறவினர்களுடன் சிறுவர் ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். காணும் பொங்கலன்று அங்கு கூட்டம் அலைமோதும் என்பதால் சிறுவர் ரயில் இயக்கத்திற்காக சிறப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே உள்ளபடி பெரியவர்களுக்கு ரூ.10, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் தினமும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை சிறுவர் ரயிலை இயக்க முடிவு செய்துள்ள அதிகாரிகள், பொங்கல் விடுமுறைக்குபின் வாரவிடுமுறை நாட்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: