இந்தியா - ஜப்பான் கடலோர காவல் படையைச் சேர்ந்த 5 கப்பல்கள், 3 விமானங்கள் வங்க கடலில் கூட்டுப்பயிற்சி: நாளை நடைபெறுகிறது

சென்னை: இந்தியா - ஜப்பான் கடற்படையைச் சேர்ந்த 5 கப்பல்கள், 3 விமானங்கள் வங்க கடலில் நாளை கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. இந்திய கடலோர காவல் படையானது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடலோர காவல் படையுடன் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. இதற்காக ஜப்பான் கடலோர காவல் படைக்கு சொந்தமான ‘ஏசிக்கோ’ என்ற கப்பல் நேற்று முன்தினம் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அப்போது கப்பலின் கேப்டன் கொய்சோ கர்டா தலைமையில் 60 பேர் கொண்ட குழு இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளது. 17ம்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சியில் கடலோர பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் இருநாட்டு ராணுவங்களின் ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இருநாட்டு கப்பல்களும் இணைந்து 16ம்தேதி ‘சாயோக் கஜின்’ என்ற பெயரில் வங்க நடுக்கடலில் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டுப்பயிற்சியில் ஐப்பான் கப்பலுடன் இணைந்து இந்திய கடலோர காவல் படையைச் சேர்ந்த 4 கப்பல் மற்றும் 3 விமானங்கள் ஈடுபடவுள்ளன. இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் நடராஜன், கிழக்கு பிராந்திய கடலோர காவல் படை தளபதி பரமேஷ், ஐப்பான் கப்பல் கேப்டன் கியோசி ஹாராடா உள்ளிட்ட இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டுப்பயிற்சியில் கடல் கொள்ளையை தடுப்பது, பேரிடர் காலங்கள் சிக்கியவர்களை மீட்பது, கடல் பாதுகாப்பில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்துவது, கடல் சட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்டவைகள் தொடர்பாக இருநாட்டு வீரர்களும் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

Related Stories: