எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் மாடுகளுக்கு சான்றிதழ் தர லஞ்சம் வாங்கும் டாக்டர்: வைரலான வீடியோவால் பரபரப்பு

அணைக்கட்டு: ஊசூர் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் மாடுகளுக்கு சான்றிதழ் வழங்க அரசு மருத்துவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நடக்கும் எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் மாடுகளை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். உரிமையாளர் மாட்டுடன் நின்றபடி எடுத்த புகைப்படம், கால்நடை மருத்துவரின் சான்றிதழ், இன்சூரன்ஸ் வைத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் ஊசூர் பகுதியில் ஒரே ஒரு கால்நடை மருத்துவர் மட்டும் உள்ளதால் நீண்ட நேரம் காத்திருந்து மாடுகளுக்கு சான்றிதழ் பெற்று செல்கின்றனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு ஊசூர் அரசு கால்நடை மருத்துவர் சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இதற்கு அரசு மருத்துவர் லஞ்சம் கேட்பதாக மாட்டின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எருதுவிடும் விழா நாளை மறுதினம் முதல் தொடங்க உள்ளதால் நேற்று சான்றிதழ் கேட்டு மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளுடன் ஊசூர் கால்நடை அரசு மருத்துவமனை மருந்தகத்தில் குவிந்தனர். அப்போது மாட்டின் உரிமையாளர் ஒருவரிடம் கால்நடை மருத்துவர் லஞ்சம் வாங்கியுள்ளார். இதனை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர். அதில் அவர் பணம் கேட்பதும், வாங்கிய பணத்தை பேன்ட் பாக்கெட்டில் வைப்பதும் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: