ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் பணப்பட்டுவாடா செய்த விவகாரத்தில் நடவடிக்கை கோரி திமுக மீண்டும் மனு: தலைமை தேர்தல் ஆணையம் உறுதி

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலின்போது நடந்த சட்டவிரோத பணப்பட்டுவாடா குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரம் மாதம் இடைத்தேர்தல் நடந்த நேரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 89 கோடி சட்டவிரோதமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து 12.4.2017 அன்று நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்த நிலையில் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

இதில் குறிப்பாக மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஆர்.கே.நகர் விவகாரம் சம்பந்தமாக விசாரணை நடத்தகோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரம் முழுமையாக இன்னும் விசாரிக்கப்படவில்லை. அதனால் தான் இன்று (நேற்று) மீண்டும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அதில்,” இந்த வழக்கை தேர்தல் ஆணையத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஆணையரிடம் கோரிக்கை வைத்து, அது தொடர்பாக மனுவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதை பரிசீலனை செய்த அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக திமுக தரப்பில் மூன்றாவது முறையாக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: