தமிழகம் முழுவதும் 2 கட்டமாக நடந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 12 லட்சம் பேர் விண்ணப்பம்

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்கள் ஆர்வமுடன் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த 4 நாள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 2020ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் 23ம் தேதி முதல் வருகிற 22ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் செய்வதற்கான விண்ணப்பம் பெறப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக போன வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்றும், கடந்த சனி, ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த 4 நாட்கள் சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. போன வாரம் சனி (4ம் தேதி), ஞாயிறு (5ம் தேதி) மற்றும் கடந்த சனி (11ம் தேதி), ஞாயிறு (12ம் தேதி) ஆகிய நான்கு நாட்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய 14 லட்சத்து 73 ஆயிரத்து 370 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி பெயர் சேர்க்க மட்டும் 11 லட்சத்து 87 ஆயிரத்து 010 பேரும், நீக்கம் செய்ய 82,826 பேரும், திருத்தம் செய்ய 1,09,944 பேரும், முகவரி மாற்றம் செய்ய 93,589 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: