வார்டு மறுவரையறை பணி 9 கலெக்டர்களுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டத்தை தவிர்த்து 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு 11ம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த வாரம் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இந்த 9 மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இந்த 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வார்டு மறுவரையறை பணிகளை பொங்கல் விடுமுறை முடிந்தவுடன் உடனடியாக தொடங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு உரிய பயிற்சியை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Stories: