நாளை மறுநாள், தித்திக்கும் பொங்கல்: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு தொடங்கியது...16 பேர் கொண்ட குழுக்கள் சோதனை

அவனியாபுரம்: பீட்டாவின் முட்டுக்கட்டை, நீதிமன்ற தடை என ஜல்லிக்கட்டுக்கு பெரும் சோதனைகள் ஏற்பட்ட காலத்தில், ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு  ஜல்லிக்கட்டுக்காக போராடியது. சென்னை மெரினாவில் தொடங்கி, அலங்காநல்லூர் வரை தொடர்ந்த போராட்டங்களின் விளைவால், 2017ம் ஆண்டு  ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றியது. எழுச்சிமிகு போராட்டத்தின் மூலம் களையிழந்த பொங்கல் திருவிழா மீண்டும் மதுரை உட்பட  தமிழகமெங்கும் உற்சாகத்துள்ளலோடு கொண்டாடப்பட்டது.

மதுரை குலுங்க... குலுங்க... இதோ... எண்ணி 2 நாட்களில், தித்திக்கும் பொங்கல் திருநாளில், மதுரை அவனியாபுரத்தில் (ஜன. 15) ஜல்லிக்கட்டு திருவிழா  கோலாகலமாக துவங்குகிறது. இதுதான் இந்தாண்டுக்கான டிரெய்லர் என்று கூறலாம். தொடர்ந்து மறுநாள் பாலமேடு (ஜன. 16), அடுத்த நாள் அலங்காநல்லூர்  (ஜன. 17) என வீரப்பெருமை பேசப்போகிறது மதுரை மாவட்டம். ஜல்லிக்கட்டுக்காக காளைகள், ‘காளையர்’ தயாராவதை, களத்திற்கே சென்று பார்வையிட்டோம்.  அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்கள் காளை வளர்ப்போர், பிடிப்போர் எல்லாம் ரொம்ப பிஸி.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு வயது 21க்கு குறையாமல் இருக்க வேண்டும். அதற்கான அடையாள சான்றிதழை (ஆதார், டிரைவிங்  லைசென்ஸ், கல்வி சான்றிதழ்) சமர்ப்பிக்க வேண்டும். எடை 48 - 55 கிலோ வரை இருக்க வேண்டும். போட்டியின்போது, வயது, உயரத்தை சான்றிதழ்கள்  கொண்டு சரி பார்த்த பின், மது உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளனரா என சோதனையிடப்படும். மேலும், வழக்கமான மருத்துவ  பரிசோதனையும் மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு கால்நடை மருத்துவமனையில் தொடங்கியது. கால்நடை  மருத்துவத்துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, உதவி இயக்குனர் தலைமையில் 16 பேர் கொண்ட குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அவனியாபுரத்தில் தை திருநாள் முதல் நாளான பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 ‘சுத்தபத்தமா இருக்கணும்’

தமிழகத்தை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு ஒரு தெய்வீக திருவிழாவாகவே கருதப்படுகிறது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளில் களமிறங்குவதற்கு ஒரு  மாதத்திற்கு முன்பே வீரர்கள், உரிமையாளர்கள் விரதம் இருப்பார்கள். சைவ உணவு மட்டுமே சாப்பிடுகின்றனர். புகை, மதுவைக்கூட தொடுவதில்லை.  அலங்காநல்லூரை பொறுத்தவரை ஜல்லிக்கட்டுக்கு 5 நாள் அல்லது 7 நாள் முன்பு, வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோயிலில் முகூர்த்தக்கால்  நடப்படும்.

ஜல்லிக்கட்டு நாளில் ஊரில் உள்ள முனியாண்டி சுவாமி கோயிலில் இருந்து பட்டு வஸ்திரம் அணிந்த காளைகள் ஊர்வலமாக சென்று, முத்தாலம்மன்,  காளியம்மன், ஐயனார் கோயிலுக்கு கொண்டு வரப்படும். இங்கு சிறப்பு பூஜைகள் முடிந்த பின் வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து  விடப்படும். தொடர்ந்து ஊர் பெரியவர்களின் காளைகள், டோக்கன் வரிசையில் காளைகள் தொடர்ந்து களமிறங்கும். போட்டிகள் முடிந்த பின்னே விரதத்தை  முடிப்பதை கிராம மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

Related Stories: