செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களால் நெரிசல்: பொதுமக்கள் கடும் அவதி

புழல்: செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலையில் ஆக்கிரமிப்பு வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். செங்குன்றம் ஜிஎன்டி சாலை, செங்குன்றம்-சென்னை கொல்கத்தா சாலை, செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் திருவள்ளூர் கூட்டுச்சாலையில் ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு புதிதாக கூட்டு சாலையில் 2 மாதத்துக்கு முன்பு சிக்னல்கள் அமைக்கப்பட்டது. அது சரிவர செயல்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமப்பட்டு செல்லும் நிலை உள்ளது. இந்த கூட்டு சாலையில் ஒரு சில நேரங்களில் மட்டும் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். குறிப்பாக வண்டலூரில் இருந்து  மீஞ்சூர் செல்லும் வாகனங்கள், மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வாகனங்கள், செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலையை கடந்து செல்லும்போது கனரக வாகனங்களால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு இரண்டு பெண்கள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செங்குன்றம் பாடியநல்லூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலைத்துறை சாலையை  அகலப்படுத்துமாறும், மூன்று சாலைகளிலும் விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி சீரான போக்குவரத்து சரி செய்ய வேண்டும் எனவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாதவரம் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டும் காணாமல் உள்ளனர். விரைவில் இதனை சரி செய்யாவிட்டால் சென்னை-கொல்கத்தா சாலையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.

Related Stories: