டெல்லியில் ஜேஎன்யூ. மாணவர்களுடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு: வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சென்னை: தாக்குதலுக்கு உள்ளான டெல்லி ஜே.என்.யூ. மாணவர்களை உதயநிதி  ஸ்டாலின் நேற்று நேரில்  சந்தித்து பேசினார். குடியுரிமை  திருத்தச்  சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக, டெல்லி  ஜவஹர்லால் நேரு   பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,   தமது சார்பில்  மாநிலங்களவை குழுத்தலைவர் திருச்சி என்.சிவாவை உடனடியாக    அனுப்பி வைத்து மாணவர்களுக்கு ஆறுதல் கூறச் செய்தார். இந்த நிலையில் தாக்கப்பட்ட ஜே.என்.யூ.வைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆறுதல் கூற திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று டெல்லி சென்றார். அங்கு அவர் தாக்கப்பட்ட மாணவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் அன்பில்    மகேஷ் பொய்யாமொழி, சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சந்திப்புக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: டெல்லி மாணவர்கள் எங்களிடம்  கேட்ட விஷயம் எதிர்க்கட்சியான நீங்கள், மாணவர்களாகிய எங்களின் கோரிக்கையை திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் வைக்க வேண்டும் என்றனர். திமுக எம்பிக்கள் அத்தனை பேரும் கண்டிப்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள். மாணவர்களுக்கான உரிமையை கண்டிப்பாக நாங்கள் மீட்டு கொடுப்போம். இந்த திட்டமிட்ட தாக்குதலின் பின்னணியில் இருக்கும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில், திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: