பொங்கல் திருநாளில் களத்தில் சீறிப்பாயும் முரட்டுக் காளைகளை, முஷ்டி மடக்கிய காளையர், தாவிப்பிடித்து அடக்கும் ‘ஜல்லிக்கட்டு விழா’ வீம்பில்லாத தமிழர் வீரத்திற்கு ஒப்பற்ற சாட்சியமாய் திகழ்கிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு, இதற்கு தடை எழுந்த போது, உலகெங்கும் மண்ணின் மைந்தர்கள், கொதித்தெழுந்து போராடி மீட்டது வரலாற்றின் பக்கங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இத்தகைய பெருமை ஜல்லிக்கட்டு களங்கள், நடப்பாண்டு பொங்கலுக்கும் தெறிக்கும் புத்துணர்ச்சியுடன் தயாராகி வருகிறது. ஆனால் சிலம்பாட்டம், ரேக்ளாரேஸ், உறியடி, வழுக்கு மரம் என்று உடலுக்கு உரமூட்டிய விளையாட்டுகளும், கரகாட்டம், குறவன் குறத்தி, கும்மிப்பாட்டு என்று மனதிற்கு இதமூட்டிய நாட்டுப்புற கலைகளும் ஒளியிழந்து விழிபிதுங்கி நிற்பது கவலைக்குரியது. எனவே, இளவட்டங்களின் பார்வை இவற்றின் மீதும் பட்டு, புத்தொளி பரப்ப வேண்டியது அவசியம் என்கின்றனர் மண்ணியல் ஆர்வலர்கள்.
ஒளியூட்டும் சூரியனுக்கும், உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் நன்றி செலுத்தும் பொங்கல் விழா, தமிழகத்தின் பாரம்பரியம் பேசும் பண்பாட்டு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. போகிப்பொங்கல், சூரியப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாட்டங்கள் களை கட்டுவது வேறு எந்த விழாவிற்கும் இல்லாத சிறப்பாகும். இப்படி தனித்துவம் பெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் அழிக்க முடியாத மாபெரும் அடையாளமாக திகழ்வது ஜல்லிக்கட்டு. தென்தமிழகத்தின் மதுரை அலங்காநல்லூர், ஜல்லிக்கட்டு விழாவின் உச்சக்கட்ட பரபரப்பு களமாக திகழ்கிறது. அதேபோல் பாலமேடு, முசிறி, தம்மம்பட்டி, துறையூர், அலங்காநத்தம் என்று வடக்கு, மேற்கு மாவட்டங்களிலும் அதன் சுவடுகள் பதிந்து கிடக்கிறது.
ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு, தமிழர்களில் தொன்மை குடிகளான ஆயர்களின் மரபுவழி குல விளையாட்டுக்களில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதே இதன் தனித்துவம். இந்த விளையாட்டின் போது, காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி, பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இதனால் 2ஆண்டுகள், ஜல்லிக்கட்டு களங்கள் இருண்டு கிடந்தது. இப்படிப்பட்ட நிலையில், ஒரு நள்ளிரவில் தலைநகரில் வெடித்துச் சிதறியது மெரினா புரட்சி என்னும் ஜல்லிக்கட்டு. சமூகவலை தளங்களின் ஆதிக்கம் துவங்கியிருந்த அந்த காலகட்டத்தில், உலகெங்கும் வாழும் தமிழர்களை வைரலாக ஒருங்கிணைத்தது நவீன தொழில் நுட்ப சாதனங்கள். கற்றார், கல்லார், எளியோர், வலியோர், இளைஞர்கள், யுவதிகள், மூத்தோர், முன்னோடிகள் என்று கோடிக்கணக்கான கரங்கள் களமிறங்கி போராடியது. தடை கேட்டவர்களையும், தடை போட்டவர்களையும் தகிக்க வைத்த இந்த போராட்டத்தின் போது, சில உயிர்களும் மாண்டு போனது. இறுதியில் நமது பாரம்பரியமான ஜல்லிக்கட்டு மீண்டும் கிடைத்தது.இப்படி வரலாற்றின் பக்கங்களில் உலகை அதிரவைத்து கிடைத்த உரிமையான ஜல்லிக்கட்டு விழா, கடந்த 2ஆண்டுகளாக எப்போதும் இல்லாத புத்துணர்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு களங்கள் களை கட்டி வருகிறது. சீறிப்பாயும் காளைகளோடு, அவற்றை தாவிப்பிடிக்க கட்டிளம் காளைகளும் ஆயத்தமாகி வருகின்றனர். இப்படி ஜல்லிக்கட்டு ஒரு புறம் புத்தொளி பரப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவை சார்ந்து நடக்கும் கிராமியக் கலைகளும், ஏனைய வீர விளையாட்டுகளும் மனங்களை விட்டு, விலகிக் கொண்டே செல்வது கவலைக்குரியது.கடந்த காலங்களில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு மட்டுமன்றி, பாரிவேட்டை, சிலம்பம், சடுகுடு ஓட்டம், இளவட்டக்கல், வழுக்குமரம் ஏறுதல், வண்டி ஓட்டம் என்று ஏராளமான வீரவிளையாட்டுகள் வீதியெங்கும் நடத்தப்பட்டது. இந்த விளையாட்டுகள் உடலை மட்டுமன்றி, உள்ளங்களையும் வலுப்படுத்தியது. இதே போல் வில்லுப்பாட்டு, குறவன்குறத்தி, கரகாட்டம், மயிலாட்டம், கும்மிப்பாட்டு என்று கிராமியக் கலைகளும் களை கட்டியது. தற்போது இந்த கலைகள் சார்ந்த கலைஞர்களை வருவாய் இன்மையும், வயோதிகமும் மூலைகளில் முடங்கச் செய்துள்ளது. இதனால் அவர்களோடு மனதை மகிழ்வித்த இந்த கலைகளும் அடங்கி விடும் அபத்தம் உள்ளது.ஜல்லிக்கட்டு என்றவுடன் எல்லையில்லா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து ஊக்கமூட்டும் இளவட்டங்கள், மெல்ல, மெல்ல மறைந்து வரும் பொங்கல் திருநாள் பாரம்பரிய விளையாட்டுகளுக்கும், பண்பாடு பேசும் கலைகளுக்கும் உற்சாகமூட்டி, ஊர் தோறும் கொண்டாட வேண்டும். அப்படி கொண்டாடினால் அவற்றோடு நமது பண்பாடும், கலாச்சாரமும், பாரம்பரியமும் நிச்சயம் புத்துயிர் பெறும் என்பது நமது முன்னோடிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை.சமுதாய ஒற்றுமைக்காக ஒலித்தது வில்லுப்பாட்டு70ஆண்டுகளுக்கு முந்தைய பொங்கல் கொண்டாட்டங்களில் ஒலித்தது வில்லுப்பாட்டு. பொதுவாக வில்லப்பாட்டுக்குரிய கதை, பாட்டு ஆகியவற்றை அக்குழுவின் தலைவரே உருவாக்குவார். கதை சொல்லுபவர் மேடையில் நடுநாயகமாக அமர்ந்து, தன்னுடைய பக்க வாத்தியக்காரர்களுடன் பாடுகின்ற பாட்டின் பொருள் இயல்பு தொனி, பாவம் அகியவற்றிற்கு ஏற்ப விசுகோலால் வில்லினை தட்டிப் பாடுவார். இவ்வில்லுப்பாட்டின் மூலம் சமுதாய மாறுபாடு, பொருளாதார முன்னேற்றம், சமுதாய ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற கருத்துக்ககளை மக்களுக்கும், மாணவர்களுக்கும் விளங்க வைத்தனர்.மகிழ்ச்சி பொங்க வீதிகளில் களை கட்டிய கரகாட்டம்பொங்கல் விழா களங்களில் களை கட்டும் கரகாட்டம் என்பது, தலையில் குடம் வைத்து கீழே விழாமல் உடலை வளைத்து ஆடும் ஒரு அற்புதம். இப்படி வைக்கப்படும் குடத்தில் நீர் நிரப்பி, தேங்காய் வைத்து மூடியிருப்பார்கள். சந்தனம், வேப்பிலை, பூமாலை, எலுமிச்சம்பழம் ஆகியவற்றால் அலங்கரித்து தலைமேல் வைத்துக்கொண்டு கரகம் விழுந்துவிடாமல் ஆடுவார்கள் கலைஞர்கள். பொதுவாக ஊரில் நோய் நொடிகள் வந்துவிடக்கூடாது, வறட்சி ஏற்படக்கூடாது என்று கோயில் வளாகங்களில் ஆடப்பட்ட கரகாட்டத்தின் போது, மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. இப்படி காந்தமாய் கவர்ந்திழுத்த கரகாட்டத்தின் வடிவம், காலப்போக்கில் மாறி, தற்போது மெல்ல, மெல்ல மறைந்து வருவது வேதனை.முயன்றால் முடியுமென்று சொல்வதே வழுக்கு மரம்நீண்டு உயர்ந்து வளர்ந்த பாக்கு மரத்தை நடு மைதானத்தில் ஊன்றி, வழுவழுப்பாக்கி குழுவாக இணைந்து மரத்தில் ஏறி உச்சியில் இருக்கும் பரிசு முடிப்பை தட்டிச் செல்வதுதான் வழுக்கு மரம் ஏறும் போட்டி. எத்தனை பேர் ஏறினாலும், அந்த மரத்தில் இருந்து வழுக்கிக் கொண்டே இருப்பார்கள். அதில் மனம் தளராமல் மீண்டும், மீண்டும் ஏறி உச்சியை அடைந்தால், அதிலிருக்கும் பரிசு முடிப்பை எடுத்துக் கொள்ளலாம். பெரும் முயற்சிக்கு பிறகு கிடைக்கும் அந்த பரிசு முடிப்பானது மட்டற்ற மகிழ்ச்சிக்கு உத்திரவாதம் அளிக்கும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை கண்முன்னே உணர்த்துவது தான் வழுக்கு மரம் ஏறும் போட்டி.