ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தால் நிலுவை ஊதியத்தை வழங்க சர்க்கரை ஆலை நிர்வாகம் முடிவு

உடுமலை: உடுமலை அமராவதி சர்க்கரை ஆலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து, 2 மாத நிலுவை ஊதியத்தை ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துகுளம் ஒன்றியம், கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் விவசாயிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி அவற்றை செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஆலையில் அரைத்து சர்க்கரை தயாரிப்பது இந்த ஆலையின் பணியாகும். இந்த தொழிற்சாலையில் ஷிப்ட் கணக்கில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆலையில் அரவை முடிந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆலை ஊழியர்களுக்கு கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்குரிய ஊதியம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஊதியம் வழங்காத ஆலை நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆலையின் நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று தொடர்ந்து 2வது நாளாக 200 தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் மேற்கொண்டனர்.  போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் கூறுகையில், ஆலை நிர்வாகம் கடந்த 3 மாதமாக ஒரு ரூபாய் கூட ஊதியம் வழங்கவில்லை. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் கடன் வாங்கி குடும்பம் நடத்தி வருகிறோம். பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக ஆலை நிர்வாகம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முன்வரவில்லை என்றால் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம், சாலைமறியல், சாகும் உண்ணாவிரதம் என அடுத்தக்கட்ட போரட்டங்களை தொடர்வோம் என்றனர். இந்நிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் உத்தரவின்படி 13ம் தேதி இரண்டு மாத ஊதியம் ஊழியர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பை ஆலை நிர்வாகம் அறிவிப்பு பலகையில் நேற்று மாலை ஒட்டியது.

Related Stories: