ஓசூர் சானமாவுக்கு மீண்டும் 40 யானைகள் வருகை: விவசாயிகள் கவலை

ஓசூர்: ஓசூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் ராகி, நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில் 40க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளதால்  விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு  வனப்பகுதியில் கடந்த மாதம் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் விவசாய பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்த வந்ததால் யானைகளை விரட்ட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள்  பலமுறை போராடி யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் நேற்று மாலை 40க்கும் மேற்பட்ட யானைகள் ஓசூர் சானமாவு வனப் பகுதிக்கு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஓசூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் ராகி, நெல் ஆகியவற்றை அறுவடை செய்து போர்களாக அமைத்து அவற்றை பிப்ரவரி மாதம் முடிய களம் செய்ய உள்ளனர். அதற்கிடையில் யானைகள் போர்களை சேதப்படுத்த கூடாது. எனவே உடனடியாக யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: