நாளை மறுதினம் குலுக்கல் மூலம் ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பித்தவர்கள் தேர்வு

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஹஜ் 2020க்காக 6,028 (7 குழந்தைகள் உட்பட) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஹஜ் பயணிகளிடம் இருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன.  எனவே, ஹஜ் 2020க்கான ஹஜ் பயணிகளை வருகிற 13ம் தேதி குலுக்கல் முறை (குறா) மூலம் தெரிவு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது. மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக்கொண்டபடி, ஹஜ் 2020க்கான ஹஜ் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்த குலுக்கல் 13ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.

2018ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் புனித பயணிகளுக்கு ஹஜ் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஹஜ் 2020க்காக ஹஜ் மானியத்தொகை வழங்கும் பொருட்டு, குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்ட உறையிலுள்ள அனைத்து பயணிகளும் தங்களின் தனிப்பட்ட சேமிப்பு வங்கி கணக்கு புத்தகத்தின் நகலினை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஹஜ் 2020க்காக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனித பயணிகள், இந்த குலுக்கலில் (குறாவில்) கலந்து கொண்டு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: