தமிழகத்தில் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு பிப்ரவரி 3-ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1028 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11,368 பதவிகளுக்கு பிப்ரவரி 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 27ம் தேதி தொடங்கி மனுக்கள் மீதான பரிசீலனை 28ம் தேதி நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில் , 505 தொடக்க பாலுற்பத்தி சங்கங்கள் உள்பட 1028 சங்கங்களில் தேர்தல் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 ஆயிரத்து 368 நிர்வாக குழு உறுப்பினர் இடங்களில் 3102 இடங்கள் பெண்களுக்கும், 2068 இடங்கள் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  வரும் 27 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. போட்டியிருப்பின் பிப்ரவரி 3 ஆம் தேதி வாக்குப்பதிவும், பிப்ரவரி 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், துணை தலைவர் இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: