அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடக்கம் : இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்பதிவில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க வயது வரம்பு 18 என்று இருந்த நிலையில் இந்தாண்டு 21 வயது என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 15, 16, 17 ஆகிய 3 தினங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

அந்த வகையில் வண்ணங்கள் பூசுவதல் மற்றும் மேடைகள் கட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  மாடுபிடி வீரர்களும் மாடுகளை அடக்குவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கால்நடை மருத்துவர்கள் மாடுகளை சோதனையிட்டு எந்த வித நோய்களும் இல்லை என்பதற்கான சான்றிதல்களையும் வழங்கி வருகின்றனர்.

அதேபோல் மாடுபிடி வீரர்களையும், போட்டிக்கு தகுதியானவர்களா என்று சோதனை நடத்தப்பட்ட பின்னரே வாடிவாசல் மைதானத்திற்குள் அனுப்பப்படுவார்கள். மேலும் இங்கு  20,000க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டை ரசிப்பதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதிலும் வெளிநாடுகளிலிருந்து வந்து ஜல்லிக்கட்டை ரசிப்போருக்கு தனியாக மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மருத்துவ சோதனைக்கு பின்னரே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: