சென்னை- அந்தமான் இடையே கடலில் பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் அதிவேக தொலைத்தொடர்பு சேவை: திட்டத்தை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை- அந்தமான் இடையே அதிவேக தொலைத்தொடர்புக்கான பைபர் ஆப்டிக் கேபிள் பதிக்கும் திட்டத்தை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தொடங்கி வைத்தார். அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் இந்திய நிலப்பகுதிக்கும் இடையே தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்த இரு நிலப்பகுதிகளும் பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் இணைக்கப்படவுள்ளது. இதற்காக சென்னை - அந்தமான் இடையேயான பைபர் ஆப்டிக் கேபிள் பதிக்கும் திட்டத்தை மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுனர் டி.கே. ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குனர் பி.கே.புர்வார், உயரதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு  செயற்கைக்கோள் மூலமே இதுவரை தகவல்தொடர்பு இருந்துவந்தது. அதன்மூலம் 3.2  ஜிபிபிஎஸ் வேகத்தில் அங்கு இணையதள சேவை கிடைத்தது.

அங்கு சுற்றுலா  வளர்ச்சி, பொதுமக்களுக்கான தகவல்தொடர்பு தேவை  அதிகரித்துள்ளதால் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  அந்தமான் நிக்கோபார் - சென்னை இடையேயான பைபர் ஆப்டிக் கேபிள் பதிக்கும் திட்டம் தகவல்தொடர்பு வளர்ச்சியில் ஒரு மைல் கல். சென்னை கடற்கரையிலிருந்து கடலில் தரைப்பகுதியிலேயே இந்த கேபிள் பதிக்கப்படுகிறது. சுறா மீனால் கூட இந்த பைபர் ஆப்டிக் கேபிளை ஒன்றும் செய்ய முடியாது. 1,224 கோடி செலவில் 2,250 கி.மீட்டர் தூரத்துக்கு கேபிள் பதிக்கும் பணியை ஜப்பானை சேர்ந்த என்இசி நிறுவனம் மேற்கொள்கிறது. ஜூன் மாதத்தில் கேபிள் பதிக்கும் பணி நிறைவுற்று அதிவேக தொலைதொடர்பு சேவை தொடங்கும். இதே போல் கொச்சி-லட்சத்தீவு இடையேயான கேபிள் பதிக்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதனால் தான் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறப்பானதொரு விஆர்எஸ் திட்டத்தை அறிவித்துள்ளேன். நாடு முழுவதும் இருந்து 78 ஆயிரம் பிஎஸ்என்எல் ஊழியர்கள், 15 ஆயிரம் எம்டிஎன்எல் ஊழியர்கள் விஆர்எஸ் பெறுகின்றனர். மொத்த மக்கள்தொகை 130 கோடியில், 121 கோடி செல்போன் இணைப்புகள் புழக்கத்தில் உள்ளன. அவற்றில் 70 கோடி ஸ்மார்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் மூலம் இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது. ஆதார், யுபிஐ பணம் செலுத்தும் வசதி மூலம் சமையல் காஸ் மானியம் என அரசின் மானியம் ₹8 லட்சம் கோடி பொதுமக்களின் வங்கிக்கணக்குகளுக்கே நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இடைத்தரகர்கள் பயன்படுத்தி வந்த 1.4 லட்சம் கோடி அரசு மானியம் சேமிக்கப்பட்டுள்ளது. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட டிஜிட்டல் பேமன்ட்கள் வழிவகுக்கும். இவ்வாறு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Related Stories: