7 தமிழர் விடுதலை வழக்கில் மத்தியஅரசின் குறுக்கீடு தேவையற்றது: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்துள்ள வழக்கில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கூடாது என்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் முறையிட்டிருக்கிறார். 7 தமிழர்கள் விடுதலை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசின் தலையீடு சிறிதும் தேவையற்றது அநீதியானது.

ஆளுனரின் செயல்பாடின்மை குறித்த இந்த வழக்கில் மத்திய அரசு சேர்க்கப்படவில்லை. மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க தமிழக ஆளுனர், தமிழக அரசு, மனுதாரர் நளினி ஆகியோர் மட்டுமே சம்பந்தப்பட்ட வழக்கு.

இந்த வழக்கில் தலையிட மத்திய அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதற்கு முன் 7 தமிழர் விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆளுனர் விளக்கம் கேட்டிருப்பதாக செய்திகள் வெளியான போது, அதை மறுத்த ஆளுனர் மாளிகை, இந்த விஷயத்தில் ஆளுனரே இறுதி முடிவு எடுப்பார். இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று விளக்கமளித்தது. அவ்வாறு இருக்கும்போது ஆளுனருக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு எவ்வாறு தலையிட முடியும்?

இவ்வழக்கில் ஏற்கனவே, 7 தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசும், ஆளுனரும் முடிவெடுக்கலாம் என்று நீதியரசர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு 2018 செப்டம்பர் 6ம் தேதியன்று தீர்ப்பளித்தது.

எனவே, 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு தேவையின்றி குறுக்கிடுவதை தவிர்த்து, அந்த கடிதத்தை திரும்பப்பெற வேண்டும்.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும். அவருக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் பரிந்துரையை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுனர் திருப்பி அனுப்பும் பட்சத்தில், தாமதிக்காமல், அமைச்சரவை மீண்டும் கூடி, அதேபோன்ற மற்றொரு பரிந்துரையை நிறைவேற்றி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும் பட்சத்தில் அதை ஏற்று அடுத்த சில நாட்களில் 7 தமிழர்களையும் ஆளுனர் விடுவித்தே ஆக வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: