போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்றுமாசு குறித்து மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு

சென்னை: போகி பண்டிகையின் போது உருவாகும் காற்றுமாசு குறித்து மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: நமது முன்னோர் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்றைய குழலை எடுத்துக் கொண்டால், தற்போது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு அடர்ந்த புகையில் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

காற்று மாசினைத்தடுக்கும் விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது போகி உறுதிமொழியினை வாசித்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடி அமைத்து துவங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடையே போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: