நாகையில் திடீர் மழை அறுவடைக்கு தயாராக இருந்த 100 ஏக்கர் சம்பா பயிர் சேதம்: விவசாயிகள் கவலை

நாகை: நாகை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் திடீரென பெய்த கனமழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 100 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமானது.

தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக ஆகஸ்ட் மாதம் 13ந் தேதி காலதாமதமாக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அது நாகை மாவட்டத்திற்கு மிகவும் கால தாமதமாகவே வந்து சேர்ந்தது.நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதியில் மழையை நம்பி 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில் இந்த பகுதிகளில் நேற்று காலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை சுமார் 15 நிமிடம் நீடித்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து விழுந்தது. பல ஆண்டுகளாக சம்பா சாகுபடி இல்லாத நிலையில் இந்த ஆண்டு ஓரளவு சம்பா சாகுபடி நடந்துள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் போது இப்படி திடீரென காற்று அடித்து மழையும் பெய்ததால்  100 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் சாய்ந்து போய் இருப்பதால் மகசூல் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: