மதுரை ஆதீன வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொள்ளை: விடுதி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை

மதுரை: மதுரை ஆதின வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு  முற்பட்டது. மதுரை ஆதீனம் மீனாட்சியம்மன் கோவில் இருக்கின்ற முக்கியமான மடமாகும். இந்த வளாகத்தின் முன்பக்கத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மதுரை ஆதினம் ஏற்கனவே குத்தகைக்காக விடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் அந்த இடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பக்தர்களிடையே பல்வேறு அதிருப்தி ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்களை காலி செய்வதற்காக இது தொடர்பான வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை சுமார் 7 மணியளவில் விடுதி உரிமையாளர் இளவரசன் என்பவர் 8 அடியாட்களுடன் வந்து தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருக்கிறது.

எனவே அந்த பகுதி தங்களுக்கு சொந்தமான பகுதியாகும் என கூறி அப்பகுதியில் இருந்த விநாயகர் சிலையை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆதினம் ஊழியர்கள் அதனை தடுக்க முற்பட்ட போது அவர்களை மிரட்டி விநாயர் சிலையை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக ஆதீனத்தின் வழக்கறிஞர் முத்து பிரகாசம் என்பவர் மதுரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே மதுரை ஆதீனத்துக்கும், தனியார் விடுதிகளுக்கும் சட்ட பிரச்சனைகள் இருந்து வருகின்ற நிலையில், தனியார் விடுதியை சேர்ந்த நிர்வாகிகள் தற்போது மிரட்டி, விநாயகர் சிலையை எடுத்து சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வழக்கின் பின்னணி தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்னர் இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: