மாவட்ட நீதிபதி அளிக்கும் பரிந்துரையின்படி தான் மாவட்டங்களில் நீதிமன்றம் அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் பதில்

சென்னை: புதிய நீதிமன்றங்களை அரசே அமைக்க முடியாது என்றும், அதற்கு உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை அவசியம் என்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்விநேரத்தின்போது பேசிய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தமது தொகுதியில் நீதிமன்றம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், புதிய நீதிமன்றத்தை அரசே தன்னிச்சையாக அமைக்க முடியாது எனவும், உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை அவசியம் எனவும் குறிப்பிட்டார். மாவட்ட நீதிபதி மூலமாக உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை அளித்து, உயர்நீதிமன்றத்தில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு மூலம் பரிந்துரை வந்தாலே, நீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றும் வழக்கு எண்ணிக்கை, மாவட்ட நீதிபதி அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையிலேயே மாவட்டங்களில் நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிமன்ற உட்கட்டமைப்புகளை மேம்படுத்த இதுவரை ரூ.287 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தற்போது மொடக்குறிச்சி தொகுதியில் நீதிமன்றம் அமைப்பதற்கு, எந்த பரிந்துரையும் இல்லை எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Related Stories: