கொக்கிரகுளம் பாலம் பணி 98 சதவீதம் நிறைவு: புதியபாலம் இணைப்பு சாலை பணி 1 வாரத்தில் முடியும்

நெல்லை: நெல்லை கொக்கிரகுளத்தில் தாமிரபரணி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள புதிய பாலப்பணி 98 சதவீதம் முடிந்ததையடுத்து பாலத்துடன் சாலையை இணைக்கும் பணி ஒரு வாரத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை-பாளை இரட்டை மாநகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆறு சுலோச்சனா முதலியார் பாலம் 165 ஆண்டுகளைக் கடந்து பழமையாகிவிட்டது. மேலும் இதில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே  தொடங்கி திருவனந்தபுரம் சாலை முழுவதும் வாகன நெரிசல் மற்றும் விபத்துகள்  அதிகரித்துள்ளன. இதனையடுத்து சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு இணையாக மற்ெறாறு பாலம் அமைத்து ஒருவழிப்பாலங்களாக பயன்படுத்தவும் பாலத்தின்  இணைப்பு பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் அருகே உள்ள பலாப்பழ பாலத்தையும் விரிவாக்கம் செய்யதிட்டமிடப்பட்டது.

இதற்காக ரூ.16.5 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு கடந்த 2018ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் பணிகள் தொடங்கின. தாமிரபரணி இரு கரைகளையும் பாலம் தொடும் வகையில் 10 தூண்கள், 11 சிலாப்புகளுடன் பாலம் அமைக்கும் பணி  மும்முரமாக நடக்கிறது. இந்தபாலத்தின் நீளம் 220 மீட்டர் ஆகும். அகலம் 14.8  மீட்டராக உள்ளது. தற்போது பாலத்தின் 98 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. இதையடுத்து அறிவியல் மையம் மற்றும் அரவிந்த் மருத்துவமனை அருகே பாலம் இணையும் இடத்தில் சாலையுடன் பாலத்தை இணைக்க சிமென்ட் கலவை கல், மற்றும் மண் நிரப்பி புதிய சாலை அமைப்பதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடக்கின்றன. இந்த சாலை அமைக்கும் பணிகள் சுமார் ஒரு வாரத்திற்குள் முடியும் என இதனை அமைப்பவர்கள் தெரிவித்தனர். பாலத்தில் வர்ணம் பூசப்படும் நிலையில் சிறிய கான்கிரீட் இணைப்புகள் முடிக்கும் பணியும் உள்ளன. அடுத்த 19 நாட்களுக்கு 10 சதவீத பணிகள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: