கொல்லிமலையில் உயிர் பலியை தடுக்க ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க கடும் கட்டுப்பாடு: வனத்துறை தீவிர கண்காணிப்பு

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்குகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி  பார்த்து விட்டு ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளில் ஒரு சிலர் மது அருந்தி விட்டு நீர்வீழ்ச்சியின் உயரமான பகுதிக்கு செல்வது வாடிக்கையாக உள்ளது. அப்போது, கால் தவறி தடாக பகுதியில் விழுந்து உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 10க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம் புதுச்சேரியிலிருந்து சுற்றுலா வந்த வாலிபர் ஒருவர் மது போதையில்  தடாக பகுதியில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதன் எதிரொலியாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, “சுற்றுலா பயணிகள் மது அருந்தி விட்டு ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை” என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் பக்கவாட்டில் உள்ள உயரமான பகுதிக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் நீர்வீழ்ச்சி பகுதியில் ஒரு வனவர் தலைமையில் 4 வனக்காப்பாளர்கள்  சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கொல்லிமலையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான புளியஞ்சோலை ஆற்றுக்கும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையடுத்து, அப்பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: