நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் தங்கள் மீது பல்கலைக்கழக ஹாஸ்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வன்முறை கும்பலை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம்  நடந்த வண்ணம் உள்ளது.

நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம்

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும், நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திகம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பாக வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று வேலை நிறுத்தம் மற்றும் மறியல், ஆர்ப்பாட்டம் போன்றவை நடைபெறுகின்றன. இதில் அரசு ஊழியர் சங்கம் மற்றும் தனியார் தொழிற்சங்கங்களை சேர்ந்த 20 கோடி  பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்  

உலக அளவில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் அபாயம் எழுந்துள்ளது.இந்த சூழ்நிலையில் தான் இன்று காலை பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட அமைச்சரவை ஆலோசனை நடத்த உள்ளது. என்ன விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்பது ஆலோசனைக்கு பின்தெரியவரும். முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Related Stories: