சபரிமலை தரிசன வழக்கை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் பெயர்கள் அறிவிப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: சபரிமலை வழக்கை விசாரிக்கும் ஒன்பது நீதிபதிகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் பத்து வயது முதல் 50 வயது வரையான பெண்களுக்கு நீண்ட காலமாக வழிபாட்டுக்கு அனுமதி  வழங்கப்படுவது கிடையாது. இதை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு செய்யலாம். அதற்கு எந்த தடையும் கிடையாது’’ என தீர்ப்பளித்தது.  இதற்கு பெண்கள் தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டாலும், பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிமன்றம் முதலாவதாக ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றுவதாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பு வெளிடப்பட்டது.

அதில், சபரிமலை தீர்ப்பில் மறு ஆய்வுக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வரும் 13ம் தேதி முதல் விசாரணை மேற்கொள்ளும் என குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில், அனைத்து மறுஆய்வு மனுக்களையும் விசாரிக்கும் ஒன்பது நீதிபதிகளின் பெயர் பட்டியலை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டது. அதில், தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில்,  நீதிபதிகள், பானுமதி, அசோக்  பூஷண், நாகேஸ்வரராவ், எம்.எம்.சந்தான கவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வரும் 13ம் தேதி முதல் மறு ஆய்வு மனுக்களை இந்த நீதிபதிகள் விசாரிக்க உள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்பு வழக்கை விசாரித்த அமர்வில் இடம்பெற்று இருந்த நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் பெண் நீதிபதியான இந்து மல்கோத்ரா ஆகியோர் அரசியல் சாசன அமர்வில் இடம் பெறவில்லை.

Related Stories: