போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முயற்சி: தாம்பரம் - வேளச்சேரி இடையே இலகு ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டம்

சென்னை: தாம்பரம் - வேளச்சேரி இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இலகு ரயில் போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தாம்பரம் - வேளச்சேரி இடையேயான போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. வேளச்சேரி மற்றும் மேடவாக்கத்தில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அலுவலக நேரங்களில் போக்குவரத்து நேரிசல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கிடையே, நேற்று கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் - வேளச்சேரி இடையிலான 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் போக்குவரத்து முறையை அமைக்க உள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சென்னையில் புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை உள்ள நிலையில் மோனோ ரயில் என்பது எதிர்காலத் திட்டமாக குறிப்பிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய ரயில் போக்குவரத்து முறையாக இலகு ரயில் போக்குவரத்தை கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இது, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடா தலைநகர் ஒட்டாவா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் நடைமுறையில் உள்ள போக்குவரத்து முறையாகும். இந்த திட்டத்தை பொறுத்தவரை, மெட்ரோ ரயில் திட்டத்தைப்போல அதிக செலவு பிடிக்கக் கூடியது இல்லை.

ஒரு கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்க, 400 முதல் 500 கோடி ரூபாய் செலவு பிடிக்கும் என்றால், இலகு ரயில் திட்டத்திற்கு 80 முதல் 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். இதன் கட்டுமானப் பணிகளுக்கும் குறைந்த அளவே செலவு பிடிக்கும். அதேபோல, குறுகிய, நெரிசலான வளைந்து செல்லக்கூடிய பாதைகளில் எளிதாக செல்லக்கூடியது. இலகு ரயிலில் கூடுதல் பயணிகளையும் ஏற்றிச்செல்ல முடியும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் கழகம் இதற்காக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகிறது.

Related Stories: