ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் ரவி (எ) ரவிச்சந்திரன், ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக மதுரை மத்திய சிறையில் 27 ஆண்டுக்கு மேலாக உள்ளார். தற்போது 48 வயதாகிவிட்டது. நான் முதுமை நிலையில் உள்ளேன். பரோல் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்து பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், அரசு வக்கீல் தினேஷ்பாபு ஆகியோர் ஆஜராகி, ‘‘தற்போது தேர்தல் காலமாக இருப்பதால் போலீசார் பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ரவிச்சந்திரனின் வீடு போதுமான பாதுகாப்பாக இல்லை. எனவே, இப்போதைக்கு பரோல் வழங்கமுடியாது’’ என்றனர். மனுதாரர் வக்கீல்கள் ஆஜராகி, ‘‘தேர்தல் பணிகள் முடிந்து விட்டது. இதே வழக்கில் தொடர்புடையவர்களுக்கு பரோல் வழங்கப்படுகிறது. ஆனால், மனுதாரருக்கு மட்டும் மறுக்கப்படுகிறது’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மனுதாரருக்கு வருகிற 10ம் தேதி முதல் 25ம் தேதி வரை 15 நாள் பரோல் வழங்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர். உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை வரும் 28ல் தாக்கல் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.

Related Stories: