மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி குறைக்கப்பட்டுள்ளதால் தமிழகத்துக்கு ரூ.4,073 கோடி இழப்பு: கவர்னர் உரையில் தமிழக அரசு புகார்

சென்னை: மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நிதி குறைந்துவிட்டதால், தமிழகத்துக்கு ரூ.4,073 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகையை தமிழகத்துக்கு விரைவாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று கவர்னர் உரையில் மத்திய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையில் தமிழக அரசு கூறியதாவது: 2011ம் ஆண்டு மே மாதம் முதல், கவர்னர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகள் பல்வேறு நிலைகளில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல், சட்டப்பேரவை விதி 110ன் கீழ் வெளியிடப்பட்ட 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 303 அறிவிப்புகளுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவையும் விரைவில் நிறைவு செய்யப்படும்.  

 2017-18ம் ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் வசூலிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவை வரியில் ஒதுக்கீடு செய்யப்படாத தொகையான ரூ.88,344.22 கோடியில் இருந்து 50 சதவீதத்தை மாநில பொருட்கள் மற்றும் சேவை வரி அடிப்படையில் வழங்குவதற்கு பதிலாக, மத்திய அரசு தனது தொகுப்பு நிதிக்கு தவறாக எடுத்து சென்றுவிட்டது. மேலும், 14வது நிதிக்குழுவின் நிதி பகிர்வு முறையின்படி இந்த தொகையில் 42 சதவீதம் மட்டுமே மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு ரூ.4073 கோடி நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலுவை தொகையை தமிழகத்துக்கு விரைவாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

சென்னை குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய கண்டலேறு அணையில் இருந்து நீரை திறந்து விட்ட ஆந்திர அரசுக்கு நன்றி. பரம்பிகுளம் -ஆழியாறு திட்டம் தொடர்பாக தமிழக முதல்வர் கேரளா சென்று அம்மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. முல்லை பெரியாறு அணையை பலப்படுத்த தமிழக அரசு ரூ.7.85 கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.7,200 கோடிக்கும் அதிகமாக தமிழக விவசாயிகள் பெற்றுள்ளனர்.

கால்நடை துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1000 கோடி செலவில் கால்நடை அறிவியல் ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஒருங்கிணைந்த கல்வி நிறுவனம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்பம் ஒன்றிற்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கத் தொகையை அறிவித்த முதல்வரை பாராட்டுகிறேன். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 10.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.3,00,501 கோடியில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இதில் இதுவரை 53 திட்டங்களுக்கான தொழில் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. 219 திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 31,426 மெகாவாட் அளவுக்கு உயர்த்தப்பட்டு ஏறக்குறைய இருமடங்காக மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் 17,850 மெகாவாட் மின் உற்பத்தி திறனையும் நிறுவும் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

* ஸ்டாலினுக்கு கவர்னர் பாராட்டு

கவர்னர் பேசத் தொடங்கியதும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து பேசினார். அப்போது, கவர்னர் பன்வாரிலால் புரோகித், எதிர்க்கட்சி தலைவருக்கு எனது பணிவான கோரிக்கை;  இரண்டு ஆண்டுகளாக இங்கு இருக்கிறேன். உங்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் நல்ல பேச்சாற்றல் கொண்டவர். உங்களுக்கு விவாதிக்கும் திறன் நன்றாக உள்ளது. இந்த சபையை விவாதத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுதான் எனது கோரிக்கை. எனது உரையை முடித்ததும் இந்த சபையை அதிகபட்ச அளவுக்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

* இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை தேவை

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக  அரசு மத்திய அரசை வலியுறுத்தும். இன்றைய நிலவரப்படி 17 மீனவர்கள் மட்டுமே  இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களையும் விரைவில் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

* முதல்வர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் கடந்த  ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 9.77 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு 5.18 லட்சம் மனுக்களுக்கு 40 நாட்களில் தீர்வு காணப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Related Stories: