வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு திமுகவினர் விடிய விடிய தர்ணா போராட்டம் : புதுக்கோட்டை, கரூரில் பரபரப்பு

சென்னை: கரூர், புதுக்கோட்டையில், தி.மு.க. வேட்பாளர் வெற்றி அறிவிக்கப்படாததால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியினர் விடிய, விடிய தர்ணா முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத்தில் 17 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 16-வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளராக லோகநாயகியும், அதிமுக வேட்பாளராக கலையரசி ரவியும் போட்டியிட்டனர். நேற்றுமுன்தினம் க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. எண்ணிக்கை முடிவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் லோகநாயகியை அறிவிக்காமல், அதிகார துஷ்பிரயோகம் செய்து நள்ளிரவில் அதிமுக வேட்பாளர் கலையரசி ரவி வெற்றி வேட்பாளராக அதிகாரிகள் அறிவித்தனர்.

இதேபோல் 1-வது வார்டில் அதிமுக வேட்பாளர் சரவணக்குமாரையும் வெற்றி பெற்றதாக அறிவித்து சென்று விட்டனர். இந்த முறைகேடை கண்டித்து தி.மு.க.வினர் மற்றும் காங்கிரசார்  க.பரமத்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர், வெற்றி பெற்ற அனைத்து தி.மு.க.வினருக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, எம்.பி. ஜோதிமணி, எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜியும் கலந்து கொண்டனர்.

இதன்பின், நேற்று காலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்.பி. பாண்டியராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் தனசேகரன்ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ‘அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்ததுதான். இனிமேல் மாற்ற முடியாது’ என திட்டவட்டமாக கூறினர். இதனை தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஏற்க மறுத்தனர். அப்போது, ஜோதிமணி, செந்தில்பாலாஜி ஆகியோர் தெரிவிக்கையில், ‘கரூரில் 45 வாக்குகள் அதிகம் பெற்று இருந்தால் அதைக்கூட மாற்றி அதிமுக வெற்றி பெற்றதாக அதிகாரிகள் அறிவித்து வருகின்றனர். கூடலூர் மேற்கு ஊராட்சியில் போட்டியிட்ட லோகநாயகி 16வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவரது வெற்றியை மறைத்து நள்ளிரவுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர். எனவே, கோர்ட்டில் வழக்கு தொடருவோம்’ என்று அறிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் கீரனூர் அரசு பள்ளியில் நேற்றுமுன்தினம் காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்தது. இதில் 37 பஞ்சாயத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற்றவர்களை அறிவிக்காமல் தேர்தல் அலுவலர்கள் தாமதப்படுத்தினர். இவற்றில் 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளர் செல்வமும், அதிமுக வேட்பாளர் முத்துசுப்ரமணியும் போட்டியிட்டனர்.

ஆரம்பத்திலிருந்தே செல்வம் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வந்தார். வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது அதிமுகவினர் வெளியில் சென்றுவிட்டு வந்தனர். அப்போது அதிமுகவினர் இல்லாதபோது எதற்கு வாக்கு எண்ணப்பட்டது என கேட்டு அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். இந்த பிரச்னையால் வெற்றி பெற்ற செல்வத்தின் பெயரை தேர்தல் அலுவலர்கள் அறிவிக்கவில்லை. இதை கண்டித்து வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின், நேற்று காலை 9.40 மணிக்கு 1607 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. செல்வம் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட 7-வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, அதிமுக சார்பில் பாலாமணி போட்டியிட்டார். தி.மு.க. சார்பில் ராஜேந்திரன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்ைக ஆரம்பத்திலிருந்தே தி.மு.க. முன்னிலை வகித்தது. ஆனால், இறுதிச்சுற்றில் திடீரென அதிமுக வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். இதனால், அதிர்ச்சிக்குள்ளான திமுகவினர் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கூறி, தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கலெக்டர் மெகராஜ், எஸ்பி அருளரசு ஆகியோர் விசாரணை நடத்தினர். எனினும், தி.மு.க.வினர் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தியே ஆக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், நள்ளிரவு 2.45 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது. இதில் பாலாமணி 16,277 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் 16,665 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதையடுத்து, ராஜேந்திரன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: