ஊராட்சி தலைவர் தேர்தலில் வென்றவர்களில் இளையவர் 21 வயது மாணவி மூத்தவர் 83 வயது மூதாட்டி

சென்னை: கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் கல்லூரி மாணவியும், திருப்பூர் மாவட்டத்தில் 83 வயது மூதாட்டியும் வெற்றி பெற்றுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் இளம் வயதினர் ஏராளமானோர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் இளம் வயதில் வென்றவர் என்ற பெருமைய கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சந்தியாராணி(21) என்ற கல்லூரி மாணவி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கே.என்.தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வேட்பாளர் சந்தியாராணி(21) என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

சந்தியாராணி 1,170 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 950 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியாராணி, கல்லூரி மாணவி ஆவார். அவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, கே.என்.தொட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இளவயதில் பஞ்சாயத்து தலைவராக வெற்றி பெற்ற சந்தியாராணிக்கு ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் அதிக வயதில் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருபவர்கள் 82 வயது மூதாட்டி விசாலாட்சி. திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசாலாட்சி வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் துரைராமசாமியின் மனைவி. மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றியத்தில் உள்ள அரிட்டாபட்டி ஊராட்சி தலைவராக 79 வயது வீரம்மாள் வெற்றி பெற்றுள்ளார். கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர், போட்டியிட்டார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட 6 பேரையும் தோற்கடித்து, தனக்கு அடுத்தப்படியாக வந்த வேட்பாளரைவிட 195 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மூதாட்டி வீரம்மாளை கிராம மக்கள் வாழ்த்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியம் அ.தரைக்குடி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்ட 73 வயது மூதாட்டி தங்கவேலு 62 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories: