குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு: திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தினம் வருகிற 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இந்த விழாவில் இந்தியாவின் கலாச்சார சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த அணிகுப்பு அமைந்திருக்கும்.

இந்த அணிவகுப்பில் இடம்பெறுவதற்காக 32 மாநிலங்கள் மற்றும் 24 அமைச்சகங்களில் இருந்து மொத்தம் 56 அலங்கார ஊர்திகளுக்கான மாதிரி வடிவங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து, எந்தெந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி கொடுப்பது என்று மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்தது. இவற்றை பரிசீலிப்பது தொடர்பாக 5 ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன. அப்போது 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 16 ஊர்திகள் மாநிலங்கள் சார்பில் பங்கேற்கவும், 6 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில், மேற்குவங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க அலங்கார ஊர்தியில் அந்த மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத்தொடர்ந்தே மேற்கு வங்க அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டு மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்தியை புறக்கணித்து இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பேசிய அக்கட்சி எம்.பி. சுகதாராய், பிரதமர் மோடியும், அமித்ஷாவும் கூட்டு சேர்ந்து மேற்கு வங்கத்துக்கு எதிராக செயல்பட்டுள்ளனர், என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: